Tuesday, December 30, 2008

'2009

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - நிலாக்காலம் !!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-)

Sunday, December 28, 2008

...

உள்ளங்கைக்குள் உறங்கட்டும்
என் காதல் ...
என்றேனும்
ஒற்றை பற்றுதலில்
முழுவதுமாய்
நீ உணரக்கூடும் ...

Sunday, December 7, 2008

இருத்தல்

பத்திரமாய் படிந்திருக்கிறது 
பட்டாம்பூச்சியின் வண்ணங்கள் 
பழுப்பேறிய நோட்டுப்பக்கங்களில் 

இதுவே போதுமானது 
உயிரைப்பிழியும் என் தனிமையை 
வரைதலில் எடுத்துரைக்க 

ஜன்னல் கண்ணாடியில் 
மங்கிய வெளிச்சத்தில் 
எனதென ஊகிக்ககூடியதாய் 
ஒரு பிம்பம் 
அனுமதிப்பதில்லை 
தனிமைக்கான என் சித்திரத்தை 

தனிமையிலேனும் 
உண்டாகிறது 
எனக்கான என் இருத்தல் 





 
 

Tuesday, November 4, 2008

திரையாலாகுவது ...



மெல்லியதொரு திரைச்சீலை
நம்மிடையே
அவசியப்படுகிறது
அநேகக் காரணங்கள்
அதற்கானதாய்
என்னிடத்தில்

உன் விழிகளின் வசீகரம்
என்னை விழுங்கிடாதிருக்கவும்

சுவாசத்தின் வெம்மைதனில்
நெகிழ்ந்து இளகாதிருக்கவும்

சிநேகத்தின் பரஸ்பரங்களில்
சிதறுண்டு போகாமலிருக்கவும்

இன்னும்
இனியும்
எத்தனையோ அத்தனையும்
எனைப் பத்திரப்படுத்த

எப்பொழுதேனும்
இதனில் என்னை
முழுவதுமாய் வாரிச்சுருட்டி
உன் உள்ளங்கைக்குள்
பொதிந்து வைக்கவும் ஆகிறது ...

Tuesday, September 23, 2008

உன் விரல் பிடித்துக் கொள்கிறேன் ...


உன் விரல் பிடித்துக் கொள்கிறேன்
அனிச்சையாய் ..
இருள் படர
ஆயத்தமாகும் பொழுது


வகைபிரிக்க முடியாத உணர்வு
இருட்டில் பயணிப்பதென்பது
பயமாகவும் இருக்கலாம்
தைரியக்குறைவாகவும் இருக்கலாம்
ஆராய விருப்பமில்லாது
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்

உறுதியளிக்க முடியாது தான்
உன் பாதைகளின் தன்மை குறித்து
இருளைக் காட்டிலும்
மோசமான தாக்கத்தை
நீ என்னில் ஏற்படுத்தலாம்
எனினும் உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்

என்னென்னவோ காரணங்களை
எனக்கு நானே கற்பித்துக் கொண்டு
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
இருட்டிலே
கொஞ்சம் கொஞ்சமாய்
என் சுயத்தின் சிதைவுகள் தென்படக்கூடும் ..

Tuesday, September 2, 2008

கொஞ்சம் உயிரும் ..... காதலென சொல்லப்படுவதும்

உயிரின் கடைசி துகள்கள்
என்னை நீங்கத் தீர்மானித்த பொழுதில்
காற்றின் கரங்களை பற்றிக்கொண்டு
காலத்தின் கைபிடிக்குள் சிக்காது மீட்டு
மலைமுகட்டில் ஒரு கழுகுக்
கூட்டை என் இருபிடமாக்கினாய்

புள்ளியாய் மட்டுமே நீ தோன்றக் கூடிய தொலைவில்
புறப்படத் துவங்கிற்று என் பிரியத்தின் பிரவாகம்

உன் சுவாசத்தின் நெடி அறிய
புழுவாய் நெளிந்து நெருங்கவே
பறந்து விலகி உனக்கான தாகம் கூட்டினாய்

உன் நெருக்கத்தின் வெம்மை கிடைக்காது போயினும்
உன்னைப் பற்றிய அனுமானங்களோடு
பயணிக்கத் துவங்கினேன்
காதலின் ஆபத்தான பள்ளங்களில்

அறிவிப்பற்ற மழையாய் நீ என்னை
நனைக்கத் தொடங்கிய பொழுதில்
உனக்கான தாகம் வற்றத் துவங்கி
உன் இருத்தலை பெருந்துயராக்கிப் போனது

உன்னைகாட்டிலும் போலியானது
என் காதலை கொழுத்து வளரவிட்ட
உன்னைபற்றியதான என் அனுமானங்கள்

என் அனுமானங்களுக்கு
உயிர் இருந்திருக்கலாம்
நான் மிஞ்சி இருக்ககூடும் ..

Saturday, August 30, 2008

அழகாய் இருக்கிறாய் ... பயமாய் இருக்கிறது ;)

நீ பகிர்ந்து கொண்ட மௌனங்கள்
எழுதப்படாத கவிதையாய் என்னுள்..

************************************

விழிகள் மொழிபெயர்க்கும்
உயிர் குடிக்கும் உன் மௌனத்தை ..

******************************

கடந்த யுகங்களில் தொலைத்த காதலை
கண்டெடுத்தேன் உன் கருவிழிக்குள் ...
******************************
உன்னிடம் பேசாத பொழுதுகள் ..
உன்னைப் பற்றியே பேசுகின்றன

(தொடரும்..)

Tuesday, July 29, 2008

....

கண்கள் இறுக்கி
கொஞ்சமேனும் மூச்சடக்கி
ஆலம் விழுதைப் பற்றி
காற்றோடு பயணிக்கும் உற்சாகத்தை
உள்ளங்கை உராய்தலுக்கு அஞ்சி
தவறவிட்டதுண்டு ...

Sunday, July 13, 2008

தேடல்...


அறியாமலே விட்டுச்செல்கிறது
ஒவ்வொரு நனைதலும்
பிறிதொரு மழைக்கான தேடலை ......

Thursday, July 3, 2008

நிறங்கள் கசியும் பூக்கள்


நொடிப்பொழுதேனும் இமைக்காமல்
பார்க்குமாறு செய்துவிடுகிறது
நிறங்கள் கசியும் பூக்கள்
அருகில் சென்று வாசம் நுகர்வதை
அவை ஆட்சேபிப்பதில்லை

தொட்டுத்தடவி மென்மை ரசிப்பதை
கொஞ்சமேனும் மறுப்பதில்லை

பறிக்கப்படுகிற தருணங்களில் அதன்
பலவீனம் மட்டுமே புலப்படுகிறது

வலுவற்ற வஸ்துக்களை அணுகுவது
எளிதானதாக இருக்கிறது

சூரியன்
எப்பொழுதும் எங்கிருந்தோ
பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது ...

Sunday, May 25, 2008

நத்தைக்கூடு



அணிந்து கொண்டதோ
அணிவிக்கப்பட்டதோ தெரியாது
நத்தை கொண்ட ஓடு .

நகர்வுகள் அனைத்திலும்
உடன் பயணித்து வரும் ஓடு
சுமையாகவும்
ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும் ...

ஓட்டை தவிர்த்த நத்தை
கற்பனைகளில் தோன்றுவதில்லை
உடன்வரும் ஒன்று
அதற்கான அடையாளமாய் ...
நத்தை கொண்ட
கூட்டிற்கான நகலாய்
பெண்ணின் வரையறைகள்
அணிந்து கொண்டதோ
அணிவிக்கப்பட்டதோ தெரியாது

ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும்
சமயங்களில் சுமையாகவும்
பிற்பொழுதுகளில்
அவளிற்கான அடையாளமாகவும் .

Wednesday, May 21, 2008

செல்லமே - II


உன் கன்னக்குழி அழகில்
நான் புதையுறும் பொழுதிலும்
உன் பிஞ்சுவிரல் நகங்கள்
என் முகத்தில் கீறும் கவிதைகளிலும்
உன் கருவிழிகளுக்குளே காணப்படும்
கவலையற்ற என் பிம்பத்திலும்
அயர்ந்து நீ தூங்கும் பொழுதில்
என் தோள் நனைக்கும் எச்சிலிலும்
உன் அதரங்களைத் தாண்டி
வழிந்தோடும் என் உதிரத்திலும்

வரங்களிற்கான கூறுகளைத்
திரட்டிக் கொண்டு
நீ தேவதையென மாறுகிறாய் ....
எனக்குச் சிறகுகள் முளைக்கத் துவங்குகிறது !

Sunday, May 4, 2008

மேகத்தின் மிச்சங்கள் ..


அடர்ந்ததாயும் ,
ஆகாயத்தின் பரந்த வெளியில்
திசைகளின்றி திரிவதாயும்
நகரும் ஓவியமாயும் இருக்கின்ற மேகம்
நொடிப் பொழுதேனும்
ஒளிகற்றைகளை உள்வாங்கிக்கொண்டு
இருளின் அறிமுகத்தைச் செய்து ,
பிழியப்படுதலை விரும்பாது
அனுமானிக்க முடியாத கணத்தில்
பொழிதலை துவங்குகிறது.

கரையத்துவங்கும் கார்மேகம்
பெருமழையாய் மாறி
தீண்டியவற்றை எல்லாம்
கரையச் செய்து ,
நிலத்தின் ஏற்ற இறக்கங்களில்
தன் இருத்தலை உணர்த்திவிட்டு
அங்கும் இங்கும் எங்குமாய்
எல்லாமுமாய் எல்லாவற்றிலுமாய்
நிரம்பி வழிகிறது .
பின்னொரு பொழுதில்
எல்லாமும் நின்றுபோய்
வெறுமையும் நிசப்தமும்
ஆட்கொண்ட பொழுதில்
இளந்தளிரின் நுனியிநூடே
துளிகளாய் வடிந்து
பிரபஞ்சத்தின் பேரிசை
ஒன்றை விட்டுச் செல்கிறது ..

உன் விரல்நுனி எப்பொழுதாவது
இந்த பேரிசைக்கான குறிப்புகளை
என்னில் விட்டுச்சென்றதுண்டு ....

Thursday, May 1, 2008

ஒற்றையாய் சில நட்சத்திரங்கள்



என் கூரைகளை
வானங்களாக்கிக் கொண்ட
அன்பு மனைவிக்கு ....
உணர்வுப் பகிர்தலுக்காக ஏங்கும்
அறுபதைத் தொடும்
உன்னவன் எழுதுவது .
மறக்க முடியாத சில தருணங்கள்
மனதில் நிழலாடுகிறது
பகிர்ந்து கொள்ள வேண்டும்
போல் இருக்கிறது ,
பாசிபடிந்த பழையவைகளை ..

ஞாபகம் வருகிறதா ,
என் பார்வைக்கு
பதிலளித்த உன் புன்னகை ..
அந்த செண்பகப்பூ புன்னகையை எண்ணி
நான் பூரிக்காத நாளில்லை .
பிற்பொழுதுகளில் ,
உன் புன்னைகையை கூட
பொருட்படுத்தாதவாறு
என் அலுவல்கள் ...

மணக்கோலத்தில்
மலர்ந்த மலராய் நீ..
மனம் பற்றியவளை
கைப்பற்றினேன் என்ற
கர்வம் மட்டும் என்னில்..
உன் இயல்புகளை பற்றி
இம்மியளவும் அறிந்திருக்கவில்லை
அறிய முற்படவும் இல்லை..
ஒன்று மட்டும் அறிந்திருந்தேன்
உன் விருப்பங்களை கருக்கி ,
என் விருப்பங்களை
குளிர் காயச்செய்தாய் ...

என் மீதான உன் புரிதல்
எந்த நிலையிலும் தோற்றதில்லை .
நான் அடிக்கடி தோற்றேன்
என் மீது நீ கொண்ட
அன்பின் வெற்றியால் ..

வேகமாய்ச் சுழல்கின்ற
இயந்திர உலகத்தில்
நீ மட்டும் எனக்கு ,
ஆதரவாகவும் ...
ஆதாரமாகவும் ...
நம் மகளின்
முதல் அழுகுரலை விட ,
அதற்கான உன் அழுகை நீரை
நேசித்தேன் ..
அதை விட
நம் முதுமையை பறைசாற்றப்
பிறந்த பேரக்குழந்தைகளை
நீ அள்ளி அணைக்கும் பொழுது
உன்னை அதிகம் நேசித்தேன் ..

காலத்தின் வேகத்தை
சமநிலையில் ஏற்றுகொள்கிறாய் ...
உன்னால் மட்டும் எப்படி ?

பேசவேண்டிய சில தருணங்களில்
நான் மௌனித்திருந்த நிமிடங்கள் பல ..
மன்னித்தருளினாய் -
புள்ளிகளை பூகம்பங்கள் ஆக்காது !
வெளிப்படுத்தாத என் வார்த்தைகளின்
வெளிப்படையான அர்த்தங்களை
நீ நன்றாகவே அறிந்திருந்தாய் ...

இயன்றவரை உன்னை விரும்பினேன்
இன்றுவரை இயலவில்லை
அதனை வெளிப்படுத்த ...

மாறாத என் காதல் தேவதையே
உன்னிடம் நிறைய பேச வேண்டும் -
நிகழ்ந்தவைகளை பற்றி ,
நிகழாதவைகளைப் ,
நிஜங்களைப் பற்றி ,
நம் நேசத்தைப் பற்றியும் ...

பகிர்ந்து கொள்ளத் தவறிய
பழைய நினைவலைகளில்
நாம் கால் நனைக்க வேண்டும் ..

இப்பொழுது ,
இளமையின் கர்வம்
என்னிடத்தில் இல்லை .
குழந்தை எனக் கைப்பற்றிக் கொள்கிறேன்
கூட்டிச் செல் எங்கேயாவது .....

நம்மைச் சுற்றி எந்தப் பிணைப்புகளும் இல்லை - வா
நம் அன்பின் பிணைப்பை மேம்படுத்துவோம் !!
நரையையும்
இரத்த அழுத்தத்தையும்
சர்க்கரை நோயையும்
பொருட்படுத்தாத காதல் பயணம்
இனிதே தொடங்கட்டும் !

மறவாதே ,
உன் விழிநீர்த்துளிகளுக்காக
என் சுண்டு விரல்
காத்துக்கொண்டிருக்கிறது ...

அன்புடன்

...................

Wednesday, April 16, 2008

சப்தமிடும் நிசப்தங்கள் ...


நிசப்தமாய் நின்றிருந்த நீர் பரப்பில்
கற்களை எறியத் துவங்கினேன்

முற்றிலும் எதிர்பாராத சலனங்கள் ...
வளர்தலை மட்டுமே பறைசாற்றப் பிறந்த வட்டங்கள்
அவற்றினூடே பிம்பமாய் நானும் வளர்கிறேன்
சின்னக் குழந்தையின் குதூகலத்தை ஒத்த நீர்த்திவலைகள்
அசைந்திராத எல்லாமும் அசைகிறது
குறுகிய எல்லாமும் வளர்கிறது
எனினும்
வளர்ந்த எதுவும் மேலும் வளரவில்லை
தேய்தலுக்கு உட்படவும் இல்லை
இறத்தலை ஒத்த பிரிதல்
மீண்டும் நிசப்தம் ...


இம்முறை நேர்ந்த
நிசப்தம் கொடியதாய் தோன்றியது
நான் ஏற்படுத்த விழைந்த சலனத்தின் பிரிவு
நீர்பரப்பை கொஞ்சம் கொஞ்சமாய் தின்னத்தொடங்கியது ...


அவசியமற்றதாகத் தோன்றியது என் செயல்
நிகழாமை நிகழ்ந்திருக்கலாம்
உன்னில் வாழ்ந்த அதே குரூரம் இப்பொழுது என்னிலும் ..
நீர்பரப்பை ஒத்திருக்கிறது என்நெஞ்சம் .

Sunday, March 30, 2008

வேண்டுதல் ...வேண்டாமை ...


அங்கே எல்லாரும்
சிகப்பு பந்துகளையும்
மஞ்சள் பந்துகளையும்
வேண்டினார்கள்

அவள்
மஞ்சள் பந்தை வேண்டினாள்
நீல பந்து கிடைத்தது
இன்னொருத்தி
சிகப்பு பந்தை வேண்டினாள்
மஞ்சள் தான் கிடைத்தது

அதோ ஒருத்தி
சிகப்பு பந்துகளையும்
மஞ்சள் பந்துகளையும்
தன்னகத்தே கொண்டு
எதையோ தேடியவளாய்
நடந்து சென்றாள் ..
அவளின் மகிழ்ச்சிக்கான காரணி
இன்னொருத்தியின் சுமையாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறது

வண்ணங்களையும் வடிவங்களையும்
மீறியதாய் தோன்றும் மகிழ்ச்சி
எங்கேயோ
ஒளிந்து கொண்டு இருக்கிறது
மனங்களில் மட்டும் இருப்பதில்லை ....

Thursday, March 20, 2008

கம்பிக்(காதல்)கோலம்


தள்ளி தள்ளித்
தயங்கி நிற்கிறேன் ...
சுற்றி வளைத்து ,
சொல்லாமல் போகிறாய் ...

புள்ளிகளாய் நானும்
இழைகளாய் நீயும் ..
மனதில் வரைந்து வைத்த
காதல் கோலத்தில்... !!!

===================================
kambikolam - a pattern, in which a stroke (Kambi, Sikku in Tamil) runs once around each dot (Pulli), and goes to the beginning point (endless/cycle), as a mostly geometrical figure.

Saturday, March 8, 2008

கண்ணாடி



வெகு நாட்கள் கழித்து
கண்ணாடி பார்க்கிறேன் ...

வற்றிய ஆற்றங்கரையின்
சலனமற்ற மணற்பரப்பாய்
மாறியிருந்தது முகம்
ஒளிர்ந்ததற்கு அடையாளமாக
கண்களைச்சுற்றி கரியின் சுவடுகள்

வான் மறைக்க விழையும்
பொழியாத மேகமாய்
புரிதல் தராத புன்னகை

விடுதலை விரும்பாத
விழிநீர்த் துளிகள்

இவ்வாறு ,
மாறியவற்றை எல்லாம்
கூர்ந்து பார்க்கிறேன் .

மாற்றங்களுக்கெல்லாம்
கர்த்தாவாய்
நீ எட்டிப் பார்க்கிறாய் ...
பிற்பகுதியில்
நீ மட்டுமே
தெரியத் துவங்குகிறாய் ...

அகத்தையும் காட்டுமெனில்
பார்த்திராமல் இருந்திருப்பேன்
........
கண்ணாடியை !

Wednesday, February 27, 2008

காதல் - இதுவாகவும் .. இதுபோலவும் !


தொலைந்தது அறிந்திருந்தும்

தொடர்கின்ற பயணம்

=====================

மீட்கப்படாத வீணை தந்த

கேட்கப்படாத ராகம்

=====================

இருவரும் ... இருவரில்

ஒளிந்து கொள்ளும்

கண்ணாமூச்சி

=======================

திரியும் நெருப்பும்

முத்தமிடும் புள்ளி

======================

பிறந்த குழந்தையின்

சுண்டுவிரல் நகம்

=========================

அலைகள் விட்டுச் செல்லும்

மணலைக் கொஞ்சும் ஈரம்

=========================

Monday, February 11, 2008

Valentine's Day விதைத்த கவிதை !


மரித்த பூக்களுக்கெல்லாம்
காகிதத்தில் கல்லறை செய்து ,
எவனோ உமிழ்ந்த எச்சத்தில்
உயிர் வாழும் அட்டையோடு ,
மெழுகின் மங்கிய ஒளியில் உணவருந்தி ,
நம் காதல் உயிர் பிழைக்க வேண்டாம் ...


நடைபாதை ஆவாரம்பூவை
நடந்தவண்ணம் ரசித்துக்கொண்டு ,
நகராது போன நிமிடங்களைப் பற்றி
நிறுத்தாமல் பேசிக்கொண்டு ,
தெரியாமல் விரல்படவேண்டி
தெரிந்தே உன்னருகில் வரும்பொழுது ,
இரண்டறக் கலந்த மூச்சுக்காற்றை
இயன்றவரை சேகரித்து வை .....

அதில் மட்டும் வாழ்ந்தால் போதும் ,
உனக்கும் எனக்குமான காதல் !

Friday, February 1, 2008

இனியும் வரப்போவதில்லை ...

அன்றைப் போன்ற
அழகானதொரு நாள்
இனியும் வரப்போவதில்லை ...

பிரபஞ்சத்தின் ,
ஒற்றை ஆண்மகனோ நீ - எனுமாறு
அகன்ற என் விழிகள் ...
நான் மட்டும் தான் அழகியா - எனச்
சுயசோதனை செய்யச் சொன்ன
தீர்க்கமான உன் பார்வை ,
இனியும் வரப்போவதில்லை ...

அலைகளைத் தாண்டிய
ஆழ்கடல் அமைதியை நினைவுறுத்தும்
மௌனத்தை மையப்படுத்திய
நம் உரையாடல்கள் ,
இனியும் வரப்போவதில்லை ...

அர்த்தமற்ற பரிமாற்றங்கள் ஆயினும்
அதை அர்த்தப்படுத்த முயற்சித்த
தூக்கிய என் புருவங்களும்
தொலையச் செய்யும் உன் புன்னகையும்
இனியும் வரப்போவதில்லை ...

விலகப் போகிறோம் என்ற
நிதர்சனம் அறிந்திருந்தும்
நெஞ்சின் அடியில் ஒட்டிக்
கொண்டிருத்த விருப்பமும் ,

தனித் தனி உலகிற்கான
தயாரிப்பில்லாத மனதும் ,

எழுந்து நடக்க ஆயத்தமான பொழுது
கண்களைப் பிரிய மறுத்த
கண்ணீர் துளிகளும் ,
இனியும் வரப்போவதில்லை ...

அன்றைப் போன்ற
அழகானதொரு நாள் ,
இனியும் வரப்போவதில்லை !

Thursday, January 31, 2008

காதல் = சுவாசம் ???!!!

உன்னை நான் சந்திக்காமல் இருந்திருந்தால்...
சுவாசிக்காமல் உயிர் வாழும் வித்(ந்)தை மட்டும் அறிந்திருப்பேன் !

என் கண்ணீர் + என் கவிதை = நீ !!!

நீ தப்பிச் செல்ல கூடாதென்று ,
மனத்தினில் மறைத்து வைத்தேன் .

என்ன பிரயோஜனம் ,

பலநேரங்களில் ..கண்ணீராய் மாறி
விழிகளின் வழியாகவெளியேறி விடுகிறாய்...
சில நேரங்களில் ... கவிதையாய் ..!

ம்....


......











பிரிவு

காதலின் வெம்மையை விட
பிரிவின் நிழல்
சில நேரங்களில் மேலானது !
=============
தொலைக்கவிருந்த என் அடையாளங்களை
மீட்டுக்கொடுத்தது - உன் பிரிவு !


Sunday, January 27, 2008

செல்லமே...



கன்னங்கள் உரசிக்கொண்டு
கார்மேகம் கரைவதை
காண்பிக்க வேண்டும் ...

இறுக்கி அணைத்தபடி
இரவின் நிசப்தத்தை
உணர்த்த வேண்டும் ...

புரியாது போனாலும்
புதியவென் கவிதைகளை
புலப்படுத்த வேண்டும்..

உணர்வுகளின் உள்ளே
உறங்கிக்கிடக்கும் இசையை
கேட்பிக்க வேண்டும்...

சுட்டு விரல் பற்றியபடி
சூரியக் கதைகள்
சொல்ல வேண்டும்...

செல்லமே ,

தேக்கிய அன்பெல்லாம்
திசையறியா ஆசைகளாய்
சிதறியிருக்கிறது ...

சிதறிக்கிடந்த நான்
கோர்க்கப் பட்டிருக்கிறேன் ,
தாய்மையால் !

Wednesday, January 23, 2008

Monday, January 14, 2008

வட்டப்பாதை



முழுமை

பாதி உயிரை
ஆதியில் தந்தான் ...

மீதியை ,
காதல் தந்தது !

Sunday, January 13, 2008

தொடர்தல் !

நீ
தள்ளிச் செல்லும் பொழுது
தூரம் நிரப்பி விடுகிறது ..
அருகில் வரும் பொழுது
ஆசையாய் சூழ்ந்து கொள்கிறது..

...

நம்மைத் தொடர்வது தான்
காதலின் வேலையா ?

Saturday, January 12, 2008

சேமிப்பு

சந்தித்திராத உனக்காக
சேமிக்கத் தொடங்கிவிட்டேன் ,

.........

காதலை !

நாணயங்களை மட்டுமே பார்த்த
உண்டியல் - என்
நாணத்தால் திணறுகிறது ;)

Friday, January 11, 2008

Pesa Nalla Time :)

"Ennanu solli Thola...?"

............

"I love u ..! "

Punnagai , sirippaga maarukirathu - Rammiyamana Isai kaadhalai nirappukirathu !

Intha matter , recent-a partha oru Tea (Brooke Bond 3 roses) Advt-la vanthuthu - kavithaigala mattume paarthu vantha en blog oru vaarthaigal illatha kavithaiyai sollatume-nu thonichu - so wanted to share this !

Rombavum malivaagi vitta vaarthai (or sentence) I-L-U .. Aaana ella manithargalum eppozhuthum ethirpaarkum varthai!! Athu ethirpaaratha tharunathil kidaikum pozhuthu - antha situation-e oru kavithai thaan!

Donno when is my turn ;)

;)

நீ

திரும்பிப் பார்ப்பதை ...

நான்

விரும்பிப் பார்க்கிறேன் ;)

Wednesday, January 9, 2008

:-)

ஏதோ ஒன்றை உன்னிடம் கேட்கிறேன் ..
நீ புன்னகைக்கிறாய் ..
உன் புன்னகை
எனக்கான கேள்வி ஆகிறது ...


அநேகத் தருணங்களில் இது நிகழ்வதால் ,
ஒன்றை மட்டும் தெளிவுப்படுத்தி விடு ...
உன் தாய் மொழி

.............

புன்னகையா?

Tuesday, January 8, 2008

தெரியவில்லை ...

தெரியவில்லை ......

நீ உன்னோடு எடுத்துச் சென்றது
என் சிறகுகளையா..
இல்லை
வானத்தையா ..???

Saturday, January 5, 2008

இயலாமை ...

என்னை பிரிவதற்கான காரணங்களை
நீ அடுக்கிக்கொண்டே சென்றாய் ...


அப்பொழுது ,
உன்னை விரும்புவதற்கான காரணம் - எனச்
சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை ...

ஏனெனில் ,
உன்னையும் - என் விருப்பங்களையும்
என்னால் பிரித்து பார்க்க இயலவில்லை ...



requires a little bit of editing - i guess !
ppl u can help me..

Wednesday, January 2, 2008

கருவறை வாசனை

அன்புள்ள அம்மா ,

கடவுளின் மடியில்
விளையாடிக் கொண்டிருந்தேன்.
கோவிலைக் காண்பிப்பதாகச் சொல்லி ,
என்னை ,
உன் கருவறைக்குள் பிரவேசிக்கச் செய்தார் , கடவுள் !


இருட்டாக இருந்தாலும் ,
இதமாக இருந்தது இந்தப் புதிய இடம்..
முதலில் பயமாக இருந்தாலும் ,
பிறகு சந்தோஷமாக வளரத் தொடங்கினேன் !

நீ சிரிக்கும் பொழுது ,
நானும் சிரித்தேன்..
நீ அழும் பொழுது ,
நானும் கண்ணீரில் ...

பிறகு தான் புரிந்தது
நம்மிடையே ஒரு புது உறவு மலர்ந்தது என்று ...
ஆமாம்
நீ என் அம்மா !

"அம்மாவும் நான் தான் "
- கடவுள் சொல்லி இருக்கிறார் !
இன்னொரு கடவுள் அம்மாவா - இல்லை
அம்மா இன்னொரு கடவுளா ?
தெரியவில்லை ...
இப்படி பல விஷயங்களை
யோசித்துக்கொண்டே வளர்ந்தேன் !

உன்னை பார்க்க வேண்டும் போல் இருந்தது ,
ஏனென்றால் நீ கடவுளின் சாயல் !

அப்பொழுது தான்
ஒரு தீராத வலி என்னை ஆட்கொண்டது ,
ஒரு அரக்கன் என் உடலசைவுகளைச் செயலிழக்கச் செய்தான் ...
ஓரிரு நிமிடங்களில் என் போராட்டம் தோல்வியில் முடிந்தது ।

நான் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் இழந்தேன் ॥

உன்னை பார்க்கமலே
உன்னை பிரிகிறேன்...
எனக்கு பிடித்தமான அந்தக் கோவிலை விட்டும்...

உன்னோடு விளையாட ஆசைப்பட்டேன்
என் பிறப்பே விளையாட்டாகப் போய்விட்டது
அந்த வெளிச்சத்து வாசிகளுக்கு ...

மீண்டும் அதே கடவுளின் மடியில் ..
அதே விளையாட்டுக்கள் தான் ...
புதியதாக இன்னொரு ஆசையும்..
மீண்டும்அதே இருட்டறையில் ,
உன் அன்பு மகளாக உலா வர வேண்டும் ...
மீண்டும் நுகர வேண்டும் ,
உன் கருவறை வாசனையை ...




இப்படிக்கு ,
பிறவாத உங்கள்
குட்டிப்பாப்பா :)

முகத்தை தொலைத்த முகமூடி !

ஒரு முகம்
சிலரால் விரும்பப்படுகிறது ...

பலரும் விரும்பிடவேண்டி
ஒப்பனை செய்து கொள்கிறது ...

எல்லாரும் விரும்பிடவேண்டி
ஒவ்வொருவருக்கும் ,
ஒவ்வொரு முகமூடி அணிகிறது...

யாரும் அந்த முகத்தை
பார்க்கவில்லை - முகமூடியை
பார்க்கிறோம் என உணரவும் இல்லை !

விரும்பப்படாத முகம் ,
அழகானதாகவும் இருக்கக்கூடும் !