Wednesday, November 4, 2009

...

ஒன்றுமிருப்பதில்லை
இந்தபுகைப்படத்தில் ..

அன்றைய அக்காட்சியின்
உயிர்மையில்லை
நிறத்தின் வீரியமில்லை
நாசி நிறைத்த வாசமில்லை
செவியில் ரீங்காரமிட்ட
சப்தங்களில்லை

கேமரா அறியாது
தீண்டிய உன்விரல்களும்
படபடத்த என்னெஞ்சமும்
நினைவில் வருவதுண்டு

Thursday, October 22, 2009

யாரோ சிந்திய புன்னகைவசீகரமானதாயுள்ளது
யாரோ சிந்திய அப்புன்னகை
முகத்தின் குறைகளனைத்தையும்
கொன்று தின்று விட்டு
எவ்வித சலனமுமின்றி
மெல்ல எழும்புகிறது
என் கவனத்தையும் வார்த்தைகளையும்
பறித்த வண்ணம்
அதன் கோரைப்பற்களை
காண்பிக்கத் துவங்குகிறது
அக்கினியை உமிழ ஆயத்தமாகிறது
என்னிடமிருந்த எல்லாமும்
பொசுங்கத் துவங்குகையில்
நினைவு கூர்கிறேன்
புன்னகைக்க மறந்த
தருணங்களைSunday, October 11, 2009

.....


வெளிறச் செய்யும்
டிராபிக் நெரிசலில் ..
மறவாது எனையழைத்துச் சொன்னாய்
சற்று முன் பொழிந்த
ஆலங்கட்டி மழை குறித்து

அருகிலிருந்தால்
நீ நனைந்திருக்கலாம்
மழைக்காகவோ
உன் அழைப்பிற்காகவோ
எதற்காகவோ
என்னில் பொழிந்த மழையில்

Friday, July 17, 2009

....


எழுத வேண்டும்
எழுதியே தீர வேண்டும்

.............

கதவுகள் திறக்கப்பட்டு
வெளிச்சம் வழியும் அறையில்
தரையில் அமர்ந்தபடி
உன்னுடன் அருந்திய
தேநீர் பற்றி

எதிலோ தொடங்கிய
உரையாடல்
லதா மங்கேஷ்கரில்
மையம் கொண்ட பொழுதில்
தூரத்திலிருந்து பிரயாணித்து வந்த
சாவன் கா மகீனா
பாடல் பற்றியும்

நீ ரசித்துச்சொன்ன
குழந்தை பிராயத்து
குதூகலங்களும்
கோமாளித்தனங்கள்
குறித்தும்

மழைக்காலத்து
மேகங்கள் குறித்தும்
லேசாக நனைக்கும்
சாரல் குறித்தும்

அப்பொழுது
அனிச்சையாய் கோர்த்துகொண்ட
நம் விரல்கள் குறித்தும்
முத்தமிட்டது குறித்தும்

............

எழுத வேண்டும்
எழுதியே தீர வேண்டும்

எனினும்
பின்மழை பொழுதுகளில்
கேட்டு ரசித்த புல்லாங்குழலிசை
காகிதங்களில் வசிப்பதில்லை

Monday, July 13, 2009

...தேநீர்க் கோப்பையில்
தெரிகிறதென் பிம்பம்

அதுவாக
இருந்திருக்கலாம்
எப்பொழுதேனும்

தெரியாதவை
தெரியாமலே போய்விடும்
அப்பொழுதில்
நிறையத் தெரிவேன்
நிறையத் தெரியாமல்
நான்

Sunday, May 24, 2009

....

முத்தம் பற்றிய கவிதைகள் 
பொருளற்று போகிறது 
விரும்பிப் பகிரப்பட்ட 
முத்தத்திடம் 

Sunday, March 29, 2009

....

சுகித்து நீ உறங்குகிறாய்
என் விழிகளுக்குள் தூசியாக ...

Friday, March 13, 2009

...

அலைகளை போலானது வாழ்வு
உயரங்களை உச்சி முகர்ந்து
மண்ணுடன் ஆகிறது உறவு ...

Thursday, March 12, 2009

பகிர விரும்புகிறேன் ...

காலச்சுவடு மற்றும் வார்த்தை ஆகிய இதழ்களில் எனது கவிதைகள் பிரசுரமாகி உள்ளது .. இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் !

http://www.kalachuvadu.com/issue-111/page45.asp
http://www.pksivakumar.blogspot.com/

Thursday, January 22, 2009

....


பற்றுதலில் படர்கிறது
உனது காதல்
பற்றப்படுதலில் கசிகிறது
எனது காதல்
நிழல்களில் நகரும்
கோர்க்கப்பட்ட விரல்களில்
பிரித்தாய இயலுவதில்லை
நமக்கான காதலை ...


Saturday, January 17, 2009

...


கண்ணிமையால் துழாவி
உன் நெஞ்சத்தின் வெற்றிடங்கள்
அறிகிறேன்
பவித்ரமான காதலால்
அவை நிரம்பி வழியவும் கூடும்