Sunday, March 30, 2008

வேண்டுதல் ...வேண்டாமை ...


அங்கே எல்லாரும்
சிகப்பு பந்துகளையும்
மஞ்சள் பந்துகளையும்
வேண்டினார்கள்

அவள்
மஞ்சள் பந்தை வேண்டினாள்
நீல பந்து கிடைத்தது
இன்னொருத்தி
சிகப்பு பந்தை வேண்டினாள்
மஞ்சள் தான் கிடைத்தது

அதோ ஒருத்தி
சிகப்பு பந்துகளையும்
மஞ்சள் பந்துகளையும்
தன்னகத்தே கொண்டு
எதையோ தேடியவளாய்
நடந்து சென்றாள் ..
அவளின் மகிழ்ச்சிக்கான காரணி
இன்னொருத்தியின் சுமையாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறது

வண்ணங்களையும் வடிவங்களையும்
மீறியதாய் தோன்றும் மகிழ்ச்சி
எங்கேயோ
ஒளிந்து கொண்டு இருக்கிறது
மனங்களில் மட்டும் இருப்பதில்லை ....

Thursday, March 20, 2008

கம்பிக்(காதல்)கோலம்


தள்ளி தள்ளித்
தயங்கி நிற்கிறேன் ...
சுற்றி வளைத்து ,
சொல்லாமல் போகிறாய் ...

புள்ளிகளாய் நானும்
இழைகளாய் நீயும் ..
மனதில் வரைந்து வைத்த
காதல் கோலத்தில்... !!!

===================================
kambikolam - a pattern, in which a stroke (Kambi, Sikku in Tamil) runs once around each dot (Pulli), and goes to the beginning point (endless/cycle), as a mostly geometrical figure.

Saturday, March 8, 2008

கண்ணாடி



வெகு நாட்கள் கழித்து
கண்ணாடி பார்க்கிறேன் ...

வற்றிய ஆற்றங்கரையின்
சலனமற்ற மணற்பரப்பாய்
மாறியிருந்தது முகம்
ஒளிர்ந்ததற்கு அடையாளமாக
கண்களைச்சுற்றி கரியின் சுவடுகள்

வான் மறைக்க விழையும்
பொழியாத மேகமாய்
புரிதல் தராத புன்னகை

விடுதலை விரும்பாத
விழிநீர்த் துளிகள்

இவ்வாறு ,
மாறியவற்றை எல்லாம்
கூர்ந்து பார்க்கிறேன் .

மாற்றங்களுக்கெல்லாம்
கர்த்தாவாய்
நீ எட்டிப் பார்க்கிறாய் ...
பிற்பகுதியில்
நீ மட்டுமே
தெரியத் துவங்குகிறாய் ...

அகத்தையும் காட்டுமெனில்
பார்த்திராமல் இருந்திருப்பேன்
........
கண்ணாடியை !