Sunday, May 25, 2008

நத்தைக்கூடு



அணிந்து கொண்டதோ
அணிவிக்கப்பட்டதோ தெரியாது
நத்தை கொண்ட ஓடு .

நகர்வுகள் அனைத்திலும்
உடன் பயணித்து வரும் ஓடு
சுமையாகவும்
ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும் ...

ஓட்டை தவிர்த்த நத்தை
கற்பனைகளில் தோன்றுவதில்லை
உடன்வரும் ஒன்று
அதற்கான அடையாளமாய் ...
நத்தை கொண்ட
கூட்டிற்கான நகலாய்
பெண்ணின் வரையறைகள்
அணிந்து கொண்டதோ
அணிவிக்கப்பட்டதோ தெரியாது

ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும்
சமயங்களில் சுமையாகவும்
பிற்பொழுதுகளில்
அவளிற்கான அடையாளமாகவும் .

Wednesday, May 21, 2008

செல்லமே - II


உன் கன்னக்குழி அழகில்
நான் புதையுறும் பொழுதிலும்
உன் பிஞ்சுவிரல் நகங்கள்
என் முகத்தில் கீறும் கவிதைகளிலும்
உன் கருவிழிகளுக்குளே காணப்படும்
கவலையற்ற என் பிம்பத்திலும்
அயர்ந்து நீ தூங்கும் பொழுதில்
என் தோள் நனைக்கும் எச்சிலிலும்
உன் அதரங்களைத் தாண்டி
வழிந்தோடும் என் உதிரத்திலும்

வரங்களிற்கான கூறுகளைத்
திரட்டிக் கொண்டு
நீ தேவதையென மாறுகிறாய் ....
எனக்குச் சிறகுகள் முளைக்கத் துவங்குகிறது !

Sunday, May 4, 2008

மேகத்தின் மிச்சங்கள் ..


அடர்ந்ததாயும் ,
ஆகாயத்தின் பரந்த வெளியில்
திசைகளின்றி திரிவதாயும்
நகரும் ஓவியமாயும் இருக்கின்ற மேகம்
நொடிப் பொழுதேனும்
ஒளிகற்றைகளை உள்வாங்கிக்கொண்டு
இருளின் அறிமுகத்தைச் செய்து ,
பிழியப்படுதலை விரும்பாது
அனுமானிக்க முடியாத கணத்தில்
பொழிதலை துவங்குகிறது.

கரையத்துவங்கும் கார்மேகம்
பெருமழையாய் மாறி
தீண்டியவற்றை எல்லாம்
கரையச் செய்து ,
நிலத்தின் ஏற்ற இறக்கங்களில்
தன் இருத்தலை உணர்த்திவிட்டு
அங்கும் இங்கும் எங்குமாய்
எல்லாமுமாய் எல்லாவற்றிலுமாய்
நிரம்பி வழிகிறது .
பின்னொரு பொழுதில்
எல்லாமும் நின்றுபோய்
வெறுமையும் நிசப்தமும்
ஆட்கொண்ட பொழுதில்
இளந்தளிரின் நுனியிநூடே
துளிகளாய் வடிந்து
பிரபஞ்சத்தின் பேரிசை
ஒன்றை விட்டுச் செல்கிறது ..

உன் விரல்நுனி எப்பொழுதாவது
இந்த பேரிசைக்கான குறிப்புகளை
என்னில் விட்டுச்சென்றதுண்டு ....

Thursday, May 1, 2008

ஒற்றையாய் சில நட்சத்திரங்கள்



என் கூரைகளை
வானங்களாக்கிக் கொண்ட
அன்பு மனைவிக்கு ....
உணர்வுப் பகிர்தலுக்காக ஏங்கும்
அறுபதைத் தொடும்
உன்னவன் எழுதுவது .
மறக்க முடியாத சில தருணங்கள்
மனதில் நிழலாடுகிறது
பகிர்ந்து கொள்ள வேண்டும்
போல் இருக்கிறது ,
பாசிபடிந்த பழையவைகளை ..

ஞாபகம் வருகிறதா ,
என் பார்வைக்கு
பதிலளித்த உன் புன்னகை ..
அந்த செண்பகப்பூ புன்னகையை எண்ணி
நான் பூரிக்காத நாளில்லை .
பிற்பொழுதுகளில் ,
உன் புன்னைகையை கூட
பொருட்படுத்தாதவாறு
என் அலுவல்கள் ...

மணக்கோலத்தில்
மலர்ந்த மலராய் நீ..
மனம் பற்றியவளை
கைப்பற்றினேன் என்ற
கர்வம் மட்டும் என்னில்..
உன் இயல்புகளை பற்றி
இம்மியளவும் அறிந்திருக்கவில்லை
அறிய முற்படவும் இல்லை..
ஒன்று மட்டும் அறிந்திருந்தேன்
உன் விருப்பங்களை கருக்கி ,
என் விருப்பங்களை
குளிர் காயச்செய்தாய் ...

என் மீதான உன் புரிதல்
எந்த நிலையிலும் தோற்றதில்லை .
நான் அடிக்கடி தோற்றேன்
என் மீது நீ கொண்ட
அன்பின் வெற்றியால் ..

வேகமாய்ச் சுழல்கின்ற
இயந்திர உலகத்தில்
நீ மட்டும் எனக்கு ,
ஆதரவாகவும் ...
ஆதாரமாகவும் ...
நம் மகளின்
முதல் அழுகுரலை விட ,
அதற்கான உன் அழுகை நீரை
நேசித்தேன் ..
அதை விட
நம் முதுமையை பறைசாற்றப்
பிறந்த பேரக்குழந்தைகளை
நீ அள்ளி அணைக்கும் பொழுது
உன்னை அதிகம் நேசித்தேன் ..

காலத்தின் வேகத்தை
சமநிலையில் ஏற்றுகொள்கிறாய் ...
உன்னால் மட்டும் எப்படி ?

பேசவேண்டிய சில தருணங்களில்
நான் மௌனித்திருந்த நிமிடங்கள் பல ..
மன்னித்தருளினாய் -
புள்ளிகளை பூகம்பங்கள் ஆக்காது !
வெளிப்படுத்தாத என் வார்த்தைகளின்
வெளிப்படையான அர்த்தங்களை
நீ நன்றாகவே அறிந்திருந்தாய் ...

இயன்றவரை உன்னை விரும்பினேன்
இன்றுவரை இயலவில்லை
அதனை வெளிப்படுத்த ...

மாறாத என் காதல் தேவதையே
உன்னிடம் நிறைய பேச வேண்டும் -
நிகழ்ந்தவைகளை பற்றி ,
நிகழாதவைகளைப் ,
நிஜங்களைப் பற்றி ,
நம் நேசத்தைப் பற்றியும் ...

பகிர்ந்து கொள்ளத் தவறிய
பழைய நினைவலைகளில்
நாம் கால் நனைக்க வேண்டும் ..

இப்பொழுது ,
இளமையின் கர்வம்
என்னிடத்தில் இல்லை .
குழந்தை எனக் கைப்பற்றிக் கொள்கிறேன்
கூட்டிச் செல் எங்கேயாவது .....

நம்மைச் சுற்றி எந்தப் பிணைப்புகளும் இல்லை - வா
நம் அன்பின் பிணைப்பை மேம்படுத்துவோம் !!
நரையையும்
இரத்த அழுத்தத்தையும்
சர்க்கரை நோயையும்
பொருட்படுத்தாத காதல் பயணம்
இனிதே தொடங்கட்டும் !

மறவாதே ,
உன் விழிநீர்த்துளிகளுக்காக
என் சுண்டு விரல்
காத்துக்கொண்டிருக்கிறது ...

அன்புடன்

...................