Sunday, March 30, 2008

வேண்டுதல் ...வேண்டாமை ...


அங்கே எல்லாரும்
சிகப்பு பந்துகளையும்
மஞ்சள் பந்துகளையும்
வேண்டினார்கள்

அவள்
மஞ்சள் பந்தை வேண்டினாள்
நீல பந்து கிடைத்தது
இன்னொருத்தி
சிகப்பு பந்தை வேண்டினாள்
மஞ்சள் தான் கிடைத்தது

அதோ ஒருத்தி
சிகப்பு பந்துகளையும்
மஞ்சள் பந்துகளையும்
தன்னகத்தே கொண்டு
எதையோ தேடியவளாய்
நடந்து சென்றாள் ..
அவளின் மகிழ்ச்சிக்கான காரணி
இன்னொருத்தியின் சுமையாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறது

வண்ணங்களையும் வடிவங்களையும்
மீறியதாய் தோன்றும் மகிழ்ச்சி
எங்கேயோ
ஒளிந்து கொண்டு இருக்கிறது
மனங்களில் மட்டும் இருப்பதில்லை ....

Thursday, March 20, 2008

கம்பிக்(காதல்)கோலம்


தள்ளி தள்ளித்
தயங்கி நிற்கிறேன் ...
சுற்றி வளைத்து ,
சொல்லாமல் போகிறாய் ...

புள்ளிகளாய் நானும்
இழைகளாய் நீயும் ..
மனதில் வரைந்து வைத்த
காதல் கோலத்தில்... !!!

===================================
kambikolam - a pattern, in which a stroke (Kambi, Sikku in Tamil) runs once around each dot (Pulli), and goes to the beginning point (endless/cycle), as a mostly geometrical figure.

Saturday, March 8, 2008

கண்ணாடி



வெகு நாட்கள் கழித்து
கண்ணாடி பார்க்கிறேன் ...

வற்றிய ஆற்றங்கரையின்
சலனமற்ற மணற்பரப்பாய்
மாறியிருந்தது முகம்
ஒளிர்ந்ததற்கு அடையாளமாக
கண்களைச்சுற்றி கரியின் சுவடுகள்

வான் மறைக்க விழையும்
பொழியாத மேகமாய்
புரிதல் தராத புன்னகை

விடுதலை விரும்பாத
விழிநீர்த் துளிகள்

இவ்வாறு ,
மாறியவற்றை எல்லாம்
கூர்ந்து பார்க்கிறேன் .

மாற்றங்களுக்கெல்லாம்
கர்த்தாவாய்
நீ எட்டிப் பார்க்கிறாய் ...
பிற்பகுதியில்
நீ மட்டுமே
தெரியத் துவங்குகிறாய் ...

அகத்தையும் காட்டுமெனில்
பார்த்திராமல் இருந்திருப்பேன்
........
கண்ணாடியை !

Wednesday, February 27, 2008

காதல் - இதுவாகவும் .. இதுபோலவும் !


தொலைந்தது அறிந்திருந்தும்

தொடர்கின்ற பயணம்

=====================

மீட்கப்படாத வீணை தந்த

கேட்கப்படாத ராகம்

=====================

இருவரும் ... இருவரில்

ஒளிந்து கொள்ளும்

கண்ணாமூச்சி

=======================

திரியும் நெருப்பும்

முத்தமிடும் புள்ளி

======================

பிறந்த குழந்தையின்

சுண்டுவிரல் நகம்

=========================

அலைகள் விட்டுச் செல்லும்

மணலைக் கொஞ்சும் ஈரம்

=========================

Monday, February 11, 2008

Valentine's Day விதைத்த கவிதை !


மரித்த பூக்களுக்கெல்லாம்
காகிதத்தில் கல்லறை செய்து ,
எவனோ உமிழ்ந்த எச்சத்தில்
உயிர் வாழும் அட்டையோடு ,
மெழுகின் மங்கிய ஒளியில் உணவருந்தி ,
நம் காதல் உயிர் பிழைக்க வேண்டாம் ...


நடைபாதை ஆவாரம்பூவை
நடந்தவண்ணம் ரசித்துக்கொண்டு ,
நகராது போன நிமிடங்களைப் பற்றி
நிறுத்தாமல் பேசிக்கொண்டு ,
தெரியாமல் விரல்படவேண்டி
தெரிந்தே உன்னருகில் வரும்பொழுது ,
இரண்டறக் கலந்த மூச்சுக்காற்றை
இயன்றவரை சேகரித்து வை .....

அதில் மட்டும் வாழ்ந்தால் போதும் ,
உனக்கும் எனக்குமான காதல் !

Friday, February 1, 2008

இனியும் வரப்போவதில்லை ...

அன்றைப் போன்ற
அழகானதொரு நாள்
இனியும் வரப்போவதில்லை ...

பிரபஞ்சத்தின் ,
ஒற்றை ஆண்மகனோ நீ - எனுமாறு
அகன்ற என் விழிகள் ...
நான் மட்டும் தான் அழகியா - எனச்
சுயசோதனை செய்யச் சொன்ன
தீர்க்கமான உன் பார்வை ,
இனியும் வரப்போவதில்லை ...

அலைகளைத் தாண்டிய
ஆழ்கடல் அமைதியை நினைவுறுத்தும்
மௌனத்தை மையப்படுத்திய
நம் உரையாடல்கள் ,
இனியும் வரப்போவதில்லை ...

அர்த்தமற்ற பரிமாற்றங்கள் ஆயினும்
அதை அர்த்தப்படுத்த முயற்சித்த
தூக்கிய என் புருவங்களும்
தொலையச் செய்யும் உன் புன்னகையும்
இனியும் வரப்போவதில்லை ...

விலகப் போகிறோம் என்ற
நிதர்சனம் அறிந்திருந்தும்
நெஞ்சின் அடியில் ஒட்டிக்
கொண்டிருத்த விருப்பமும் ,

தனித் தனி உலகிற்கான
தயாரிப்பில்லாத மனதும் ,

எழுந்து நடக்க ஆயத்தமான பொழுது
கண்களைப் பிரிய மறுத்த
கண்ணீர் துளிகளும் ,
இனியும் வரப்போவதில்லை ...

அன்றைப் போன்ற
அழகானதொரு நாள் ,
இனியும் வரப்போவதில்லை !

Thursday, January 31, 2008

காதல் = சுவாசம் ???!!!

உன்னை நான் சந்திக்காமல் இருந்திருந்தால்...
சுவாசிக்காமல் உயிர் வாழும் வித்(ந்)தை மட்டும் அறிந்திருப்பேன் !

என் கண்ணீர் + என் கவிதை = நீ !!!

நீ தப்பிச் செல்ல கூடாதென்று ,
மனத்தினில் மறைத்து வைத்தேன் .

என்ன பிரயோஜனம் ,

பலநேரங்களில் ..கண்ணீராய் மாறி
விழிகளின் வழியாகவெளியேறி விடுகிறாய்...
சில நேரங்களில் ... கவிதையாய் ..!