Thursday, March 12, 2009

பகிர விரும்புகிறேன் ...

காலச்சுவடு மற்றும் வார்த்தை ஆகிய இதழ்களில் எனது கவிதைகள் பிரசுரமாகி உள்ளது .. இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் !

http://www.kalachuvadu.com/issue-111/page45.asp
http://www.pksivakumar.blogspot.com/

Thursday, January 22, 2009

....


பற்றுதலில் படர்கிறது
உனது காதல்
பற்றப்படுதலில் கசிகிறது
எனது காதல்
நிழல்களில் நகரும்
கோர்க்கப்பட்ட விரல்களில்
பிரித்தாய இயலுவதில்லை
நமக்கான காதலை ...


Saturday, January 17, 2009

...


கண்ணிமையால் துழாவி
உன் நெஞ்சத்தின் வெற்றிடங்கள்
அறிகிறேன்
பவித்ரமான காதலால்
அவை நிரம்பி வழியவும் கூடும்

Tuesday, December 30, 2008

'2009

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - நிலாக்காலம் !!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-)

Sunday, December 28, 2008

...

உள்ளங்கைக்குள் உறங்கட்டும்
என் காதல் ...
என்றேனும்
ஒற்றை பற்றுதலில்
முழுவதுமாய்
நீ உணரக்கூடும் ...

Sunday, December 7, 2008

இருத்தல்

பத்திரமாய் படிந்திருக்கிறது 
பட்டாம்பூச்சியின் வண்ணங்கள் 
பழுப்பேறிய நோட்டுப்பக்கங்களில் 

இதுவே போதுமானது 
உயிரைப்பிழியும் என் தனிமையை 
வரைதலில் எடுத்துரைக்க 

ஜன்னல் கண்ணாடியில் 
மங்கிய வெளிச்சத்தில் 
எனதென ஊகிக்ககூடியதாய் 
ஒரு பிம்பம் 
அனுமதிப்பதில்லை 
தனிமைக்கான என் சித்திரத்தை 

தனிமையிலேனும் 
உண்டாகிறது 
எனக்கான என் இருத்தல் 





 
 

Tuesday, November 4, 2008

திரையாலாகுவது ...



மெல்லியதொரு திரைச்சீலை
நம்மிடையே
அவசியப்படுகிறது
அநேகக் காரணங்கள்
அதற்கானதாய்
என்னிடத்தில்

உன் விழிகளின் வசீகரம்
என்னை விழுங்கிடாதிருக்கவும்

சுவாசத்தின் வெம்மைதனில்
நெகிழ்ந்து இளகாதிருக்கவும்

சிநேகத்தின் பரஸ்பரங்களில்
சிதறுண்டு போகாமலிருக்கவும்

இன்னும்
இனியும்
எத்தனையோ அத்தனையும்
எனைப் பத்திரப்படுத்த

எப்பொழுதேனும்
இதனில் என்னை
முழுவதுமாய் வாரிச்சுருட்டி
உன் உள்ளங்கைக்குள்
பொதிந்து வைக்கவும் ஆகிறது ...

Tuesday, September 23, 2008

உன் விரல் பிடித்துக் கொள்கிறேன் ...


உன் விரல் பிடித்துக் கொள்கிறேன்
அனிச்சையாய் ..
இருள் படர
ஆயத்தமாகும் பொழுது


வகைபிரிக்க முடியாத உணர்வு
இருட்டில் பயணிப்பதென்பது
பயமாகவும் இருக்கலாம்
தைரியக்குறைவாகவும் இருக்கலாம்
ஆராய விருப்பமில்லாது
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்

உறுதியளிக்க முடியாது தான்
உன் பாதைகளின் தன்மை குறித்து
இருளைக் காட்டிலும்
மோசமான தாக்கத்தை
நீ என்னில் ஏற்படுத்தலாம்
எனினும் உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்

என்னென்னவோ காரணங்களை
எனக்கு நானே கற்பித்துக் கொண்டு
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
இருட்டிலே
கொஞ்சம் கொஞ்சமாய்
என் சுயத்தின் சிதைவுகள் தென்படக்கூடும் ..

Tuesday, September 2, 2008

கொஞ்சம் உயிரும் ..... காதலென சொல்லப்படுவதும்

உயிரின் கடைசி துகள்கள்
என்னை நீங்கத் தீர்மானித்த பொழுதில்
காற்றின் கரங்களை பற்றிக்கொண்டு
காலத்தின் கைபிடிக்குள் சிக்காது மீட்டு
மலைமுகட்டில் ஒரு கழுகுக்
கூட்டை என் இருபிடமாக்கினாய்

புள்ளியாய் மட்டுமே நீ தோன்றக் கூடிய தொலைவில்
புறப்படத் துவங்கிற்று என் பிரியத்தின் பிரவாகம்

உன் சுவாசத்தின் நெடி அறிய
புழுவாய் நெளிந்து நெருங்கவே
பறந்து விலகி உனக்கான தாகம் கூட்டினாய்

உன் நெருக்கத்தின் வெம்மை கிடைக்காது போயினும்
உன்னைப் பற்றிய அனுமானங்களோடு
பயணிக்கத் துவங்கினேன்
காதலின் ஆபத்தான பள்ளங்களில்

அறிவிப்பற்ற மழையாய் நீ என்னை
நனைக்கத் தொடங்கிய பொழுதில்
உனக்கான தாகம் வற்றத் துவங்கி
உன் இருத்தலை பெருந்துயராக்கிப் போனது

உன்னைகாட்டிலும் போலியானது
என் காதலை கொழுத்து வளரவிட்ட
உன்னைபற்றியதான என் அனுமானங்கள்

என் அனுமானங்களுக்கு
உயிர் இருந்திருக்கலாம்
நான் மிஞ்சி இருக்ககூடும் ..

Saturday, August 30, 2008

அழகாய் இருக்கிறாய் ... பயமாய் இருக்கிறது ;)

நீ பகிர்ந்து கொண்ட மௌனங்கள்
எழுதப்படாத கவிதையாய் என்னுள்..

************************************

விழிகள் மொழிபெயர்க்கும்
உயிர் குடிக்கும் உன் மௌனத்தை ..

******************************

கடந்த யுகங்களில் தொலைத்த காதலை
கண்டெடுத்தேன் உன் கருவிழிக்குள் ...
******************************
உன்னிடம் பேசாத பொழுதுகள் ..
உன்னைப் பற்றியே பேசுகின்றன

(தொடரும்..)